செவ்வாய், அக்டோபர் 11, 2011

இலையுதிர் காலம்!!!

பூமத்தியரேகைக்கு அருகில் உள்ளதால், நம் தமிழகம் மாபெரும் தட்பவெட்ப மாறுதலை சந்திப்பதில்லை. ஆகவே இலை உதிர் காலம் என்பது, இலைகள் வறண்டு உதிரும் காலம் மட்டுமே. வட துருவத்தை நோக்கியோ அல்லது தென் துருவத்தை நோக்கியோ செல்லும்பொழுது, தட்பவெட்ப மாற்றம் அசாதரணமாக உள்ளது. உதாரணமாக, டெல்லியில் கொடுங்கோடையும், கடுங்குளிரும் இருக்கும். கோடை காலத்தில் இருந்து குளிர் காலத்திற்கு மாறும், நாட்களே இலையுதிர் காலமாக கருதப்படுகிறது. கடும் வெயிலில் வாழ்வதற்கு இருக்கும் இலைகள், இலையுதிர் காலத்தில் வெட்பம் குறையும் போது, தங்கள் நிறத்தை சிவப்பாகவும், பிறகு மஞ்சளாகவும் மாற்றி, இறுதியில் உதிர்கின்றன. இந்த இலைகளின் நிற மாற்றம், கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதை பார்ப்பதற்கு எப்போதும் ஒரு கூட்டம் படை எடுக்கும். நியூ கம்சையர் என்ற மாநிலத்தில் இந்த நிற மாற்றம் அபிரிதமாக இருக்கும். அங்கே வெள்ளை மலை என்று ஒரு குறிஞ்சி நிலப்பரப்பு உள்ளது, அது சுமார் எண்பதாயிரம் ஏக்கரில் அமைந்துள்ளது.

நேற்றுதான் இந்த வெள்ளை மலையில் இருந்து வந்தோம். திங்கட்க்கிழமை கொலம்பஸ் தினம் என்பதால், மூன்று நாட்களுக்கு முன்பு, இங்கே செல்வதற்கு திட்டம் தீட்டினோம். அன்று இரவே ஒரு தாங்கும் விடுதியை இணையத்தில் முன் பதிவு செய்தோம். மறு நாள் ஒரு நான்கு சக்கர சிற்றுந்தை(car) வாடகைக்கு பதிவு செய்தோம். நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து, இந்த இடம் சுமார் 400 மைல்கள் இருக்கும். 400 மைல்கள் சொந்த வண்டியில் செல்வதை விட வாடகை வண்டி சிக்கனம் என்பதால், அந்த முடிவு! வெள்ளிக்கிழமை அலுவலகத்தில் இருந்து வந்த உடனேயே, வெள்ளை மலையில் எங்கே நிறம் மாறியிருக்கிறது என்று இணையத்தில் ஆய்வு செய்தேன். ஐந்து நாட்களக்கு முன்பு பதிவு செய்ப்பட்ட மாற்றம் என்பதால், அதன் நம்பகத்தன்மை சற்றே கேள்விக்குரியதாக இருந்தாலும், நம்பினேன்! அதில் இருந்த பதிவு, "நியூ கம்சயிரின், வடக்கே மட்டுமே நிறம் மாறியுள்ளது", என்பதே! ஆகவே முதலில் வடக்கு நியூ கம்சையர் செல்லத் திட்டமிட்டோம்.

நான்கு மணிக்கு செல்லத் திட்டமிட்டு, ஆறு மணிக்கு கிளம்பினோம். நேரே ஒரு எரிபொருள் நிரப்பும் இடத்தில், பெற்றோலை நிரப்பிக்கொண்டு, சென்றோம். நம் நாட்டைப்போலவே, இங்கேயும் ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலைக்கும் ஒரு எண் உள்ளது. முதலில், 287 தேசிய நெடுஞ்சாலையில் சென்று, பிறகு 95ல் சென்று நியூ யார்க் மாநிலத்தை கடந்தோம். பிறகு அதே 95ல் கனக்டிக்கட்டை அடைந்தோம். அங்கே ஒரு ஓய்வெடுக்கும் இடத்தில் நிறுத்தி, என் மனைவியிடம் வண்டியை ஒப்படைத்தேன். எனக்கான ஒரு நம்பிக்கை, ஓட்டுனரின் அருகில் அமர்ந்து தூங்கினால், ஓட்டுனருக்கும் தூக்கம் வரும் என்பது. ஆகவே, அமர்ந்தவுடன் நான் ஓட்டுனரிடம் சொல்வ்வது, "தூக்கம் வந்தால், என்னை எழுப்புங்கள்" என்பதே! அதாவது நான் தூங்கப்போகிறேன் என்று சொல்லாமல் சொல்வது. அதையே என் மனைவியிடமும் சொல்லிவிட்டு, ஆழ்ந்த நித்திரைக்கு சென்றேன். நெடுஞ்சாலையில் என் மனைவி ஓட்டுவது அதுவே முதல் முறை என்ற பயம் சற்றே இருந்தாலும், உறக்கம் முக்கியம் என்பதால், கண் அயர்ந்தேன். நான் கண் விழித்த போது, மசாசுசத்ஸ் மாநிலத்தை தாண்டி, வெர்மொண்டில் இருந்தோம். அது சனிக்கிழமை காலை என்பதால், எங்கள் ஊரில் உள்ள அனைவருக்கும் அலைப்பேசியில் அழைத்து மொக்கை போட்டுக்கொண்டிருந்தேன். பிறகு ஓர் இடத்தில் இருந்து, எரிபொருள் நிரப்பி, நான் ஓட்டத் துவங்கினேன்.

மனமெல்லாம் அந்த நிறங்களை கற்பனை செய்துகொண்டு இருந்தது. சீரிய வேகத்தில், நாங்கள் செல்ல வேண்டிய இடத்தின் வட பகுதிக்கு சென்றுவிட்டோம். ஆனால்! நிறங்கள் மட்டுமல்ல, இலைகளையே காணவில்லை. என்னடா இது! என்ற ஒரு வெறுப்பில், எங்கேனும் ஒரு இலையைக் கண்டால், அதை புகைப்படமாக தொலைபேசியில் பதிவு செய்தோம். சப்வே என்று ஒரு இடத்தில் சென்று மதிய உணவை முடித்துக்கொண்டு, நிறங்கள் எல்லாம் எங்கே, என்று விரக்தியில் அங்கே பணிபுரியும் ஒருவரிடம் கேட்டோம். அவரோ, நிறமெல்லாம் இங்கே வந்து சென்று விட்டது, தெற்கே, 16 ஆம் சாலையில் செல்லுங்கள் என்றார். நாங்கள் தங்கும் இடத்திற்கும், அதே சாலை தான் என்பதால், சற்றே மனதை தேற்றிக்கொண்டு சென்றோம்.

முதலில் இலேசாக, மஞ்சள் நிறம் தெரிந்தது, உடனே ஒரு புகைப்படம். பிறகு செல்லச் செல்ல மஞ்சளும், பச்சையும் மாறி மாறி வந்து மனதை அள்ளியது. ஒரு வழியாக தங்கும் விடுதியை அடைந்தோம். அங்கே வாசிங்டன் மலை என்று ஒரு மலை உச்சி உள்ளது. இந்த மலை உச்சிக்கு வாகனத்தை செலுத்துவது என்பது ஒரு திகிலான அனுபவம். முன்பே கூகுளில், அது குறித்து தெரிந்து கொண்டேன். ஒன்றே ஒன்று மட்டும் புரிந்தது, ஒரு 10 செமீ தவறினால், வாகனம் பாதாளத்தில் என்பது! என்னைக்கோ உயரம் பற்றிய ஒரு பயம் இருந்தது. அதுவே அந்த பயத்தை உடைக்க நல்ல சந்தர்ப்பம் என்று முடிவெடுத்து, என் மனைவியிடம், அதில் உள்ள பயத்தை சொல்லாமல், "நாளை காலை வாசிங்டன் மலை முகட்டுக்கு செல்லலாம்" என்றேன்.

காலை எட்டு மணிக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து, வழக்கம்போல ஒம்பதரை மணிக்கு மலை உச்சிக்கு செல்லும் வழியை அடைந்தோம்! மலை அடிவாரத்தில் இருந்த போது, என் மனம் வேகமாக துடித்தது. எல்லாவற்றையும் கற்பனை செய்துகொண்டேன். "பாதுகாப்பாக சென்று வருவேன்", ஒரு ஐம்பது முறை மெதுவாக முனுமுனுத்துக்கொண்டேன். சிற்றுந்தில் முதல் கியரில் செல்லச் சொல்லி அனுப்பினார்கள். ஏலு மைலும் முதல் கியர்தான்! அந்த பாதை சற்று செங்குத்தாக ஏறியது, பிறகு மஞ்சள் நிறங்களில் மரங்கள், அடடா இங்கு வராமல் இருந்தால் இதையெல்லாம் பார்க்காமல் இருந்திருப்பேனே என்ற மகழ்ச்சியிலும், இதற்குத்தான் இப்படி பயந்தார்களா என்றும் வியந்தேன். அந்த நிறம் மாறிய மரங்களைத் தாண்டி, பைன் மரங்களைக் கடந்தோம். சாலை சற்றே நெடுகல் ஆனது, உயரம் சற்றே அதிகம் ஆனது, என் கிலியும்தான். சாலையும் சற்றே செங்குத்தானது. எதிரே வாகனங்கள் வரும் பொழுது, நான் என் வண்டியை அப்படியே நிறுத்திக்கொண்டேன். பாதையின் பக்கங்களில் ஒரு தடுப்பு சுவரோ, ஒரு கம்பியோ கூட இல்லை. அரை அடிக்கும் குறைவாக நகர்ந்தால், தொடங்கிய இடத்தை அடைந்து விடுவோம். இடையே ஒரு அரை மையிலுக்கு, வெறும் மண் சாலை. அந்த மண் சாலையை கடந்த உடனே, உச்சியை அடைந்தோம். என் மனம் சொல்லவொண்ணா ஒரு குதூகலத்தை அடைந்தது. எதையோ அடைந்தது போல், ஒரு மட்டற்ற மகிழ்ச்சி. உயரம் குறித்த என் அச்சம் தகர்த்து!


இந்த பாதையில் எதிரே ஒரு வண்டி வந்தால் எப்படி இருக்கும்.அந்த மண் சாலையை பதிவு செய்ய தவறிவிட்டோம். அநேகமாக நாங்கள் உறைந்து போயிருக்க வேண்டும்!




கீழே வரும்போது, எந்த பயமும் இல்லாமல் வந்தேன். இரண்டு, மூன்று இடங்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். என் மனம், மகிழ்ச்சியில் கரைபுரண்டது. அங்கே இருந்த நிறங்கள் எல்லாம், அற்புதமாக இருந்தாலும், என் மனம் அந்த மலை உச்சியையே நினைத்துக்கொண்டு இருந்தது. எங்கள் வாகனத்தில் ஒட்டுவதற்கு, "இந்த வாகனம், வாசிங்டன் மலையை உச்சியை அடைந்தது" என்ற பசை தரித்த அட்டையைக் கொடுத்தார்கள்.

பிறகு புகைப்படங்கள்! முன்பெல்லாம் ஒரு பத்தடிக்கு இருக்கும், ராட்டன் தூரிகளை பார்த்தாலே, கண்கள் சுழற்றும். அன்று 500 அடி மலை உயரத்தில் இருந்து, ஒரு மிகப்பெரிய வளைந்து நெளிந்த சறுக்கு மரத்தில் சறுக்கி, என் மனைவியை அசத்தினேன். என் மனைவி வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டாள். பிறகு அன்றைய தினம் முடிந்த போது, மறு நாள் நிறங்களைப் பார்க்க எங்கே போகலாம் என்று கேட்டேன். அந்த விடுதியில் இருந்தவர், சாலை 112 செல்லுங்கள் என்றார்.

மறுநாள் காலை, 112 ஐ நோக்கி சென்றோம். இந்த சாலை, நாங்கள் இருந்ததில் இருந்து, சற்று தெற்கே, கிழக்கு மேற்காக ஓடுகின்றது. 112 ண் ஆரம்பத்தை அடைந்தோம். சிறிது தூரத்திலேயே, நிறங்கள் தென்பட்டன. சாலை எங்கும், பச்சையும், சிகப்பும், மஞ்சளும் கொட்டிக் கிடந்தது. இந்த சாலை, ஒரு சிறு ஓடையை ஒட்டியே சென்றது. கண்கள் நிரம்பவில்லை என்று புகைப்படம் எடுத்தோம். இயற்கை சொல்லுவதில், கோடியில் ஒன்று கூட புகைப்படம் சொல்வதில்லை என்பதை உணர்ந்தோம்.







ப்ஃலும் சார்ச் என்ற இடத்திற்கு வந்து ஒரு இரு புகைபடம் எடுத்துக்கொண்டு , எங்கள் வீட்டை நோக்கி ஓட்டினோம். சுமார் எட்டு மணி நேரம், வீட்டை அடைந்தோம். சுமார் அறுபது மணி நேரத்தில் 1050 மையில்கள் ஒட்டியிருந்தோம். வாசிங்டன் மலை உச்சியும், அந்த உச்சியில் இருந்த "6288 அடி" என்ற பலகையும் நினைவை விட்டு அகல மறுக்கிறது.

https://picasaweb.google.com/hiplanet/zEvLWF#