வெள்ளி, மார்ச் 23, 2012

நயாகரா!!!

நயாகரா!!!

திருமணம் ஆன முதல் வருடம், நாங்கள் மிச்சிகன் மாகணத்தில் இருந்தோம். எனது மனைவியின் முதல் பிறந்தநாளுக்கு முந்திய நாள்,எதாவது ஒரு ஆனந்த அதிர்ச்சி கொடுக்கவேண்டும் என்று, அலுவலகத்தில் இருக்கும்பொழுது நயாகரா செல்லலாமா என்ற ஒரு எண்ணம் மனதில் தோன்றியது. தங்கும் விடுதிகளுக்கான முன்னேர்ப்பாடுகளை செய்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். மிகவும் சாதரணமாக, கலமசு என்கிற நகரத்திற்கு சென்று ஒருநாள் தங்கிவிட்டுவரலாம் என்று கூறினேன். ஒரு நாள் தங்குவதற்கான தேவையான துணிமணிகளை எடுத்துக்கொண்டு வண்டியை கிளப்பினோம். கலமசு நகரம் நாங்கள் இருந்த இடத்தில் இருந்து சுமார் ஒன்னரை மணி நேரப் பயணத்தில் இருந்தது. சுமார் ஐந்து மணி நேரம் சென்று இருப்போம், என் மனைவி, இத்தனை தூரமா செல்ல வேண்டும் என்று கூறி, GPSஇல் பார்க்க, இது நயாகரா பக்கம் செல்கிறது என்று கண் விளித்து கேட்டாள். நானும் மிகவும் அமைதியாக, தெரியவில்லையே என்றேன். உடனே கண்டுகொண்டு நயாகரா தானே செல்கிறோம் என்றாள். இது ஒரு மிக அதிர்ச்சியாக இருந்தது.
பிறகு காரின் எரிபொருள் குறைவாக இருந்ததால், ஒரு பண்ணிரண்டு மணியளவில் ஒரு காஸ் ஸ்டேஷன் சென்று எரிபொருள் நிரப்பினோம். என் மனைவி காபி வாங்குவதற்காக, அருகில் இருந்த கடைக்கு சென்றாள், காரின் பின் சீட்டில் இருந்த கேக்கை எடுத்து மெழுகுவர்த்தி கொளுத்தி தயாராக இருந்தேன். பிறகென்ன, பிறந்த நாள் வாழ்த்து பாடினோம், சில ஆனந்த கண்ணீர், அடுத்து பிறந்த நாளுக்கும் ஏதாவது செய்யவேண்டுமே என்ற என்னுடயை கவலை, இதை எல்லாம் தாண்டி தாங்கும் விடுதியை அடைந்தோம்.

காலை ஒரு எட்டு மணிக்கு எழுந்து, நயாகரா சென்றோம், ஒரு மண்ணும் புரியவில்லை என்பார்களே, அப்படித்தான் இருந்தது! அருகில் இருந்த சுற்றுலாத்தல மையத்திற்கு சென்றோம், டூர் வண்டி இருக்கிறது என்றார்கள். டிக்கெட் வாங்கினோம், ஏறி அமர்ந்தோம். ஓட்டுனர், நயாகராவில் எப்படி மின்சாரம் தயாரிக்கிறார்கள் என்பது முதல், அதன் பல்லாயிரக்கனக்கான வருட வரலாறு போன்ற மொக்கைகளை வழங்கினார். இப்படி ஒரு இரண்டு மணி நேரம், "எப்படா இண்ட்ரவல் விடுவீங்க" என்றிருந்தது. அடுத்ததாக maid of the mist என்றார்.

வேணாம்! வலிக்குது!, என்று வடிவேலு கதையாக நான் கதறினாலும், காசு கொடுத்தாகி விட்டதே என்று சென்றேன். ஒரு படகில் ஏற்ற ஒரு லிப்டுக்கு அழைத்துச் சென்றார்கள். ஒரு ஆறு மாடி உயரத்திற்கு கீழே சென்றோம். படகில் ஏற ஒரு பெருங்கூட்டம் காத்திருந்தது. ஏறிக்கொண்டோம்! பேருந்திலேயே ஓட்டுனருக்கு அருகில் தான் வருவேன் என்று அடம் பிடிப்பேன், இங்கு கேற்கவா வேண்டும், படகின் நுனியில் நின்று கொண்டேன். நயகாரா அருவி விழுந்து கொண்டு இருப்பது கண்களில் தெரிந்தது! பிரமாண்டம் என்பது மிக சிறிய வார்த்தை. அருவி விழுகின்ற காட்சியும், நூறடி உயரத்தில் இருந்து விழுவதால் எழுகின்ற நீர் துவளைகளின் மூடமும், அதனால் எழுகின்ற ஒலியும், மனம் உள் வாங்கிக்கொள்வதை விட பல்லாயிரம் மடங்கு அதிகமாய் இருந்தது. படகு நீர் வீழ்ச்சியை நோக்கி, நெருங்கிக் கொண்டு இருந்தது. அதிர்ச்சி, பிரமிப்பு, இன்னும் பல உணர்வுகள், ஐந்தாயிரம் வருடங்களைத் தாண்டி வாழும் தமிழுக்கு வார்த்தைகள் போதவில்லை. குதிரை லாட வடிவில் இருந்த அருவியின் மையத்தில் இருந்தோம். எதையும் சிந்திக்காமல், இன்பத்தில் மூழ்கி இருப்பது தான் தியானம் என்கிறார்கள், படகு அங்கிருந்து கிளம்பி வந்த வெகு நேரம் கழித்தே எனக்கு தோன்றியது. பிறகு பல புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம்.

பிறகு cave of winds என்கிற இடத்திற்கு சென்றோம். அதே போல ஆறு மாடி லிப்ட் பயணம். நயாகரா அருவி, இரண்டு அருவிகளாக விழுகிறது, உண்மையில் மூன்றாக விழுகிறது, மூன்றாவது மிகச் சிறயதாக இருப்பதால், இரண்டு என்று மட்டுமே குறிப்பிடுகிறோம். முதலில் சென்றது, ஒரு அருவி, இப்போது இரண்டாவது அருவி. ஆறு மாடி கீழே சென்றவுடன், மலையில் குடைந்த பொந்து போன்ற ஒரு வழியில் நடந்து சென்று, வெளிப்புறத்தை அடைந்தால், ஒரு 100 அடி தூரத்தில் இரண்டாவது அருவி. ஒரு 1000 அடி அகலத்திற்கு, 150 அடி உயரத்தில் இருந்து நீர் விழுகிறது, அது விழும் வேகமும், அடிக்கும் வேகமும், நம்மை பயமுறுத்துகின்றன. ஒரு மரத்திலேயே ஏணி போன்ற ஒரு கட்டமைப்பை வைத்திருக்கிறார்கள். அதில் ஏறிச்சென்றால், மொத்த அருவியும் நம் மீது விழுவது போன்ற ஒரு உணர்வு! இன்பம் மனதை அள்ளுகிறது. வெளிய வர மனம் இல்லாமல் வெளியே வந்தோம்.

பிறகென்ன, நேரே வீட்டுக்கு வண்டியை கிளப்பினோம். இரவு ஒரு மூன்று மணி இருக்கும், வீடு வந்து சேர்ந்தோம். சில வாரங்கள், பக்கத்துக்கு வீட்டுப் பெண்களும், சொந்தக்காரப் பெண்களும், நள்ளிரவில் கேக் வெட்டியது பற்றி பேசி என்னை ஒரு ஹீரோ ஆக்கினார்கள்! சில மாதங்களில் எல்லாரும் மறந்து போனார்கள்! இது வரை நாலைந்து முறை, நயாகரா சென்று வந்து விட்டோம், முதல் முறை போல் இருந்ததா என்றால், பதிலை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்!










பி.கு: பயணத்தை சொன்னாலும், சில தகவல்களையும் சொல்ல விழைகிறேன். நயாகரா அருவி நகர்ந்து கொண்டே செல்கிறது. சில வருடங்களில் 1.4 மீட்டர் வரை நகர்ந்திருக்கிறது. உலகிலேயே மிக பெரிய மின்சார உற்பத்தி நிலையம் இதுதான். இது ஒரு ஆறு இல்லை, ஒரு ஏரியில் இருந்து தண்ணீர் நிரம்பி மற்றொரு ஏரியில் விழுவதே நயாகரா. ஆனாலும் அதற்கு பெயர் நயாகரா ஆறு தான். நயாகராவின் பெயர் அமெரிக்க ஆதிவாசிகளின் மொழியில், பயங்கரமான சத்தத்தோடு விழுவது என்று பொருள். அந்த தண்ணீர் உற்பத்தி ஆவது, கடைசி பனி காலத்தில் உருவாகிய பனி பாறைகளின் நீர். இது போன்ற பல மொக்கைகளை இரண்டு மணி நேரம் கேட்டோம்.